Saturday 4th of May 2024 02:14:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச நீதி அரங்கில் தமிழரின் முதல் சாட்சி! - இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மனோ எம்.பி. இரங்கல்!

சர்வதேச நீதி அரங்கில் தமிழரின் முதல் சாட்சி! - இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மனோ எம்.பி. இரங்கல்!


"உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடுனரும் முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை. 2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. அவருக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்புக் குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்."

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்பின் நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதிக்கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல்போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.

அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐ.நாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐ.நா. சபை அப்பாவி மக்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.

நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்குப் பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.

ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாகக் கொண்டு இன்று வடக்கு, கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியைத் தருகின்றது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE